Friday 21 October 2011

அறுபத்து மூன்று நாயன்மார் வரலாறு. அதிபத்த நாயனார்........


     
               சோழ நாட்டில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த நுளைப்பாடியில், மீனவர் குலத்தில் பிறந்தவர் அதிபத்தர். சிறந்த சிவபக்தர்.  அவர் மீனவர்களின் தலைவர்.  கடலுக்கு சென்று பல வகை மீன்களையும் வலை வீசி பிடித்து வருவார். அவர் பிடிக்கும் மீன்களில், சிறந்த ஒரு மீனைத்  தேர்ந்தெடுத்து, அதை சிவபெருமானுக்கென்று நீரிலேயே விட்டு விடுவார். ஒவ்வொறு நாளும் மீனை விட்டு வந்தவர், சிவபெருமான் மீது கொண்ட அன்பை மட்டும் விடாது வாழ்ந்து வந்தார். 

               சிவனுக்காகவே வாழ்ந்து வந்த அவரை, ஒருநாள் சிவபெருமான் சோதிக்க எண்ணினார். அதைத் தொடர்ந்து வந்த பல நாட்களிலும், அவரது வலையில் ஒரேயொரு மீன் மட்டுமே கிடைத்து வந்தது. வேறு  மீன்கள் கிடைக்க வில்லையே என்று சிறிதும் கவலைப்படாத அதிபத்தர், அந்த ஒரு மீனையும் எப்போதும் போல, கடலிலே விட்டு விடுவார். மீன்கள் கிடைக்காமையால் அவருக்கு செல்வ வளம் சுருங்கியது. அவருடைய குடும்பத்தினர் உணவின்றி வருந்தும் நிலை ஏற்பட்டது. ஆனாலும் அவர் சிவபெருமானுக்குக்  கொடுக்க ஒரு மீனாவது கிடைத்ததே என்று மகிழ்ச்சி கொண்டார். 

               ஆனாலும் சிவபெருமான் அவரை விடுவதாய் இல்லை. ஒரு நாள் அதிபத்தருக்கு ஒரு மீன் கூட கிடைக்காது போயிற்று. அப்போது சிவபெருமான் என்ன செய்தார் தெரியுமா? சுத்தமான பசும்பொன்னில், ஒளிசிந்தும் மணிகளால் கொண்ட உறுப்புகள் பொருந்தும்படி ஒரு அற்புத மீனை உருவாக்கினார். அந்த விலைமதிப்பற்ற மீனைத் தமது தொண்டரான அதிபத்தரின் வலையில் விழும்படி செய்தார்.  

                ஆனால் அதிபத்தரோ, இது பொன்னாலான மீனாதலால், இது இறைவனுக்கே உரியது என்று அதை சிவபெருமானுக்காக கடலிலேயே விட்டு விட்டார். மீண்டும் மீண்டும் அதை அதிபத்தரின் வலையில் விழச்செய்த  சிவபெருமானுக்காக, மீண்டும் மீண்டும் அதை கடலிலேயே விட்டு வந்தார் அதிபத்தர். 

                மிகுந்த வறுமையாய் இருந்த போதும், தாம் கொண்ட கொள்கையின் சிறுதும் பிசகாத அதிபத்தருக்காக, தேவர்கள் பூமாரி பொழிந்தனர். விண்ணில் வேத வாத்தியங்கள் முழங்கின. தம்முடைய சிவலோக அடியார் கூட்டத்தில், அதிபத்தரையும் சேர்த்துக்கொள்ள சிவபெருமான் அருளினார்.
                 உயிர்க்கொலை புரியும் தொழிலாயினும், அதைச் செய்யும் நிலையாயினும், இறைவன் திருவடிகளில் எப்போதும் தன சிந்தையை வைத்திருந்தார் அதிபத்தர். 
               
                 பொருளையே முதலாகக்  கொண்ட இந்த உலகில், வறுமையில் வாழ்ந்தாலும், இறைவனின் அருளை மட்டுமே நாடியதால், அதிபத்தரை உலகம் ஒரு மெயத்தொண்டராக ஏற்றுக்கொண்டது என்று பொருள்படுமாறு,
  
                   அகில லோகமும் பொருள் முதற்றாமெனும் அளவில் 
                   புகலும் அப்பெரும் பற்றினைப் புரையற எறிந்த 
                   இகலில் மெய்த் திருத்தொண்டர்......

         என்பார் சேக்கிழார் பெருமான்.


2 comments:

  1. நாயன்மார்களின் வரலாறு தந்தமைக்கு நன்றி.
    மன்னிக்கவும் வரலாற்றை படிப்பது சுலபமாக இல்லை. காரணம் நாயன்மார்களின் நிகழ்வுகலை பகுதிகளாக பிரித்து தொடர்ந்து கொடுத்துள்ளீகள். அதர்க்கு பதிலாக , நாயன்மார்களின் பெயெர்களை அட்டவனை படுத்தி , அதில் எது தேவையோ அந்த பெயரை க்ளிக் செய்து படிப்பதற்க்கு வசதி செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. தொடர்புக்கு. 90420-26288.

    ReplyDelete